மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் வசந்த்தாதா சர்க்கரை இன்ஸ்டிடியூட் செயல்படுகிறது. புனே, சோலாப்பூர், கோலாப்பூர் மாவட்டங்களில் கரும்பு அதிக அளவில் விளைகிறது. இதற்கான ஆராய்ச்சியில் வசந்த்தாதா சர்க்கரை இன்ஸ்டிடியூட் செயல்பட்டு வருகிறது.
இந்நிறுவனம் புதிய ரக கரும்பு ரகங்கள் குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறது. இதன் தலைவராக சரத்பவார் இருக்கிறார். துணை முதல்வர் அஜித்பவாரும் இதில் அறங்காவலராக இருக்கிறார்.
இந்நிறுவனம் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளிடம் ஒரு டன் கரும்புக்கு ஒரு ரூபாய் வசூலித்து வருகிறது. அந்த ஒரு ரூபாய்க்கு இப்போது மாநில அரசு முதல் முறையாக கணக்கு கேட்க ஆரம்பித்துள்ளது.

இந்த சர்க்கரை ஆராய்ச்சி மையத்தின் செயல்பாடு குறித்து மகாராஷ்டிரா அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மாநில சர்க்கரை கமிஷனர், வசந்த்தாதா சர்க்கரை ஆராய்ச்சி மையத்தில் வசூலிக்கப்படும் தொகை எவ்வாறு செலவிடப்படுகிறது என்பது குறித்து தணிக்கை செய்ய கமிஷன் அமைக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.
இதனை பழிவாங்கும் நடவடிக்கை என்று தேசியவாத காங்கிரஸ் குற்றம் சாட்டி இருக்கிறது.
