மும்பை புறநகர் பகுதியில் உள்ள போரிவலி என்ற இடத்தில் மாநகராட்சி பஸ் நிறுத்ததிற்காக ஒதுக்கப்பட்டு இருந்த இடத்தில் ஆக்கிரமிப்புகள் இருந்தன. அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டு இருந்தது.
அதன் பிறகு கடந்த ஜூலை மாதம் இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது சட்டவிரோத ஆக்கிரமிப்பை அகற்ற மும்பை மாநகராட்சிக்கு சுப்ரீம் கோர்ட் 3 மாதம் அவகாசம் கொடுத்தது. பல முறை இதற்காகக் காலக்கெடு வழங்கப்பட்டபோதிலும் மும்பை மாநகராட்சி சட்டவிரோத ஆக்கிரமிப்பை இடிப்பதில் தாமதம் செய்து வந்தது.
இவ்வழக்கு மீண்டும் தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மனோஜ் மிஸ்ரா, 2025ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவைச் செயல்படுத்த மாநகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிவித்தார்.
.
மும்பை மாநகராட்சி சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ஆர். பி. பட், ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, அவர்களை நேரில் அழைத்து விசாரித்த பின்னரே ஆக்கிரமிப்பை அகற்றுவது குறித்த முடிவை எடுக்க வேண்டும் என்று சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதைச் சுட்டிக்காட்டினார்.
இந்த உத்தரவுதான் ஆக்கிரமிப்பை அகற்ற தாமதப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார். இதையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு வழங்கப்பட்ட உத்தரவுகளைச் செயல்படுத்தத் தவறியதற்காக, மாநகராட்சி ஆணையர் அஸ்வினி பிடேவுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியதுடன், அவரது ஊதியத்தை நிறுத்தி வைக்குமாறும், 5 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்துமாறும் உத்தரவிட்டுள்ளது.
மேலும், ஆக்கிரமிப்பாளர்களுடன் மாநகராட்சி நிர்வாகம் கைகோர்த்துச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டி, மிகக் கடுமையான கருத்துகளையும் தெரிவித்தனர். சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்ற 30 நாட்கள் அவகாசம் கொடுக்கும்படி மாநகராட்சி தரப்பில் கேட்கப்பட்டது.
.மும்பை: ரயில் சேவை பாதிக்கப்பட்டதால் தண்டவாளத்தில் நடந்த பயணிகள்; ரயில் மோதி மூவர் பலியான சோகம்.
ஆனால் அதனை நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனர். மேலும் மாநகராட்சி கமிஷனருக்கும், அவரது தனிப்பட்ட உதவியாளருக்கும் மாநகராட்சியும், மாநில அரசும் சம்பளம் கொடுப்பதை நிறுத்தவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் திட்டமிட்டு செயல்படுத்தப்படாமல் இருப்பதாகத் தெரிவித்த நீதிபதிகள், இது ஆக்கிரமிப்பாளர்களுடன் கூட்டுச் சேர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஒன்றாகும் என்று தெரிவித்தனர்.
.
மேலும், மாநகராட்சி அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவுகளைச் செயல்படுத்தாமல் இருப்பதன் மூலம் ஆக்கிரமிப்பாளர்களுக்குப் பாதுகாப்பு அளித்து வருகின்றனர் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
தலைமை நீதிபதி சூர்ய காந்த் தெரிவித்த கருத்தில், “ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றுவதற்கு மாநகராட்சிக்குத் தடை விதிக்காத சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுகளை அமல்படுத்துவதா அல்லது சிவில் நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்துவதா என்று கமிஷனருக்குத் தெரியவில்லை.
நாங்கள் போதுமான கால அவகாசம் அளித்துவிட்டோம். இனி ஒரு நாள் கூட அவகாசம் வழங்கப்படமாட்டாது. அவர்கள் நள்ளிரவில் அமர்ந்தாவது அந்த உத்தரவைப் செயல்படுத்தட்டும். எப்படிச் செயல்பட வேண்டும் என்பதை அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.
.மும்பை: முற்றிய கணவன் மனைவி சண்டை; 9 மாத குழந்தை நடைமேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசிப்பட்ட கொடூரம்








