கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ், மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியதாக கூறப்படும் விவகாரம், தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரித்து, 7 நாள்களுக்குள் நடவடிக்கை அறிக்கை அளிக்கத் தமிழக டிஜிபி-க்கு உத்தரவிட்டிருந்தது.
இதற்கிடையில் சென்னையைச் சேர்ந்த அதிமுக வழக்கறிஞர் ஆர்.திரிசூலி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில், “கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டருக்கு தவெக – எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகச் செய்தித்தாள்கள், செய்தித் தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
.
மேலும், இந்த விவகாரம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் முறைப்படி புகாரளிக்க வேண்டுமென காத்திருக்காமல் பொதுவெளியில் உள்ள தகவல்களை வைத்து விசாரணை நடத்த வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆரம்பத்திலிருந்தே இந்தக் குற்றச்சாட்டை வெறும் வதந்தி என்றே குறிப்பிட்டு வந்த தவெகவைச் சேர்ந்த அமைச்சர்களும், எம்.எல்.ஏ-க்களும், `இது தொடர்பாக எங்களுக்கு ஆட்சியர் தரப்பிலிருந்து எந்தப் புகாரும் வரவில்லை' என ஊடகங்களில் பேசிவந்தனர். அதே பதிலை நேற்று கூட நீதிமன்றத்திலும் உறுதிப்படுத்தியது தமிழக அரசு.
.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், தவெக எம்.எல்.ஏ சி. அருள் விக்னேஷ் மீது மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் (SP) முறையான புகார் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக அரசு மற்றும் மாவட்ட கலெக்டரின் கருத்துகளைக் கேட்டு நாளைக்குள் விளக்கம் அளிக்கும்படி அரசுத் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி விசாரணை நாளை நடைபெறும் என நேற்று குறிப்பிட்டிருந்தார்.
அதன் அடிப்படையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.ஜான் சத்யன் ஆஜராகி, பாதிக்கப்பட்ட பெண் ஐஏஎஸ் அதிகாரியுடன் தான் நடத்திய கலந்துரையாடல் குறித்த எழுத்துப்பூர்வமான குறிப்பை நீதிபதியிடம் சமர்ப்பித்தார்.
.
மேலும், அதிகாரியின் புகாரின் பேரில் தற்போது FIR பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில் எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது எந்தெந்த பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.
அதன்படி BNS 75, 78, 79 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் கசிந்திருக்கிறது.
பாலியல் நோக்கமுள்ள இரட்டை அர்த்தப் பேச்சுகள் அல்லது கருத்துகள் தெரிவிப்பது, பெண்ணின் விருப்பத்திற்கு எதிராக ஆபாசக் காட்சிகளைக் காட்டுதல், பெண் விருப்பமில்லை என்று தெளிவாகத் தெரிவித்த பிறகும் தொடர்ந்து பின்தொடர்வது, மீண்டும் மீண்டும் தொடர்புகொள்ள முயற்சிப்பது. இணையம், மின்னஞ்சல் அல்லது பிற மின்னணு தகவல் தொடர்புகளைத் தொடர்ந்து கண்காணிப்பது, பெண்ணை அவமதிக்கும் நோக்கத்துடன் வார்த்தைகளைப் பயன்படுத்துதல், பெண்ணின் தனிப்பட்ட உரிமை மற்றும் அந்தரங்கத்தில் அத்துமீறி நுழைதல் ஆகியவை இந்த பிரிவில் உள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையானால் எம்.எல்.ஏ அருள் விக்னேஷுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. அதேபோல BNS 75 ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவு என்பது குறிப்பிடத்தக்கது.!
.கீர்த்தி சுரேஷ் முதல் கலெக்டர் வரை… `சபல’ சர்ச்சையில் கள்ளக்குறிச்சி த.வெ.க எம்.எல்.ஏ








