உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி வைக்க அசாதுதீன் ஒவைசி தலைமையிலான ஏஐஎம்ஐஎம் கட்சி முயற்சி மேற்கொண்டது. ஆனால் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
இதையடுத்து அசாதுதீன் ஒவைசி உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க மற்றும் சமாஜ்வாடி கூட்டணிக்கு மாற்றாக ஒரு அணியை உருவாக்கி இருக்கிறார். அந்த அணியில் பட்டியலினத் தலைவர் சந்திரசேகர் ஆசாத் தலைமையில் செயல்படும் ஆசாத் சமாஜ் கட்சியைச் சேர்த்து இருக்கிறார்.
இந்தக் கட்சிகள் உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் அனைத்துத் தொகுதியிலும் வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்துள்ளன. இந்தக் கூட்டணிக்கு சமாஜிக் பரிவர்தன் மோர்ச்சா என்று பெயரிடப்பட்டுள்ளது. முஸ்லிம்-தலித் கூட்டணி என்ற ஒரு புதிய அரசியல் களத்தை உருவாக்க இருவரும் இந்த அணியை உருவாக்கி இருக்கின்றனர்.
.
இந்தக் கூட்டணியின் முதல் கூட்டம் மீரட்டில் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய அசாதுதீன் ஒவைசி, நாங்கள் 400 ஆண்டுகளாகத் தொழுது வந்த இடத்திற்கு அகிலேஷ் செல்கிறார். மசூதிகளும் மதரஸாக்களும் இடிக்கப்பட்ட இடங்களுக்கு யாதவ் சென்றிருக்கிறாரா?
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தலித் மற்றும் சிறுபான்மையினர் ஆகியோருக்கான சமாஜ்வாடி கட்சி பாடுபடுவதைப் பற்றி அகிலேஷ் யாதவ் பேசுகிறார். ஆனால் அவர் முதலமைச்சராக இருந்தபோது, 2013-ல் முசாஃபர்நகர் படுகொலை நடந்தது. 50,000 மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர். 47 முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தபோதிலும் சமாஜ்வாடி கட்சி எதுவும் செய்யவில்லை. சமாஜ்வாடி அரசு நிவாரண முகாம்களை இடித்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
அவர் மேலும் கூறுகையில், 1987-ல் மீரட்டில் நடந்த படுகொலைகளை ஓவைசி காங்கிரஸுக்கு நினைவூட்டினார். 1987ம் ஆண்டு, இதே மீரட்டில், ஹாஷிம்புராவில் 42 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். அப்போது ஆட்சி செய்தது காங்கிரஸுடையது. இது குறித்து உங்கள் தாத்தாக்களிடம் கேட்டுப் பாருங்கள்.
.
பாஜகவை எந்தக் கட்சி தோற்கடிக்கிறதோ, அந்தக் கட்சிக்கு தலித்துகளும் முஸ்லிம்களும் வாக்களிக்க வேண்டும் என்று அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். ஆனால் 2014, 2017, 2019 அல்லது 2022-ல் சமாஜ்வாடி கட்சி பாஜகவைத் தோற்கடித்ததா? என்று கேள்வி எழுப்பினார்.
ஆதித்யநாத் அல்லது அகிலேஷ் யாதவ் பெயரைக் குறிப்பிடாமல், மீசை மற்றும் தாடி வைத்திருப்பவர்களின் கூட்டணி தலைமுடி இல்லாதவர்களையும், சவரம் செய்தவர்களையும் பாதிக்கும் என்று அவர் கூறினார். நாங்கள் இனி எந்த அரசியல் கட்சிக்கும் தலைகுனிய மாட்டோம், யாரிடமும் பிச்சை கேட்க மாட்டோம், யாருக்காகவும் சிவப்பு கம்பளத்தை விரிக்க மாட்டோம் என்று ஓவைசி மேலும் கூறினார்.
டிசம்பர் 12ம் தேதி அகிலேஷ் யாதவ் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலுக்குச் செல்ல உள்ளார். 2019ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் இந்த நிலத்தை இந்துக்களுக்கு வழங்கியதைத் தொடர்ந்து, அந்த இடத்தில் கோயில் கட்டப்பட்டது. கடந்த 2024ம் ஆண்டு ஜனவரியில் கோயில் கும்பாபிஷேகம் (பிரதிஷ்டை) நடைபெற்ற பிறகு, அகிலேஷ் யாதவ் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அகிலேஷ் யாதவின் வருகையை வரவேற்பதாகக் கூறிய அதே வேளையில், அகிலேஷ் யாதவின் தந்தை முலாயம் சிங் யாதவ் முதல்வராக இருந்தபோது, 1990-ல் அந்த இடத்திற்குச் செல்ல முயன்ற இந்து குழுவினர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்காக அவர் முதலில் ராம பக்தர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
.மீண்டெழுந்த சரத்பவார், அகிலேஷ் யாதவ்: சட்டமேலவை தேர்தலில் நாக்பூர், வாரணாசியை இழந்த பாஜக








