பெரியார் அறிவுலகம் நூலத்துக்கு நூல் கொள்முதல் செய்ததில் ஊழல் நடைபெற்றிருப்பதாக தெரிவித்த எழுத்தாளர் பெருமாள் முருகன் “அந்தத் தொகைக் கோடிக்கணக்கில் இருக்கும் என்று தோன்றுகிறது. இந்நூலகத்துக்கு விநியோகிப்பதற்காகவே புதுப் பதிப்பகங்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன. செயற்கை நுண்ணறிவு மூலம் நூல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நூலாசிரியர் பெயர்கள் எல்லாம் பொய்ப்பெயர்கள். நூல்களில் காணப்படும் ’பன்னாட்டுத் தரப் புத்தக எண்’ (ISBN) அனைத்தும் பொய்யானவை." எனத் தெரிவித்திருந்தார்.
.
அதைத் தொடர்ந்து, முதல்வர் விஜய் தன் எக்ஸ் பக்கத்தில், “நாம் அரசியலுக்கு வந்தபோதே பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடித்து வருவது தி.மு.க.தான் என்று பகிரங்கமாக நமது மாநாட்டிலேயே அறிவித்தோம். ஊழலின் ஊற்றுக்கண்ணே தி.மு.க.தான் என்பதையும் இன்று வரை நாம் மட்டுமே சமரசமின்றிச் சொல்லி வருகிறோம்.
எப்போதும் தி.மு.க. பற்றி நாம் சொல்வது உண்மைதான் என்பதைத் தி.மு.க.வே மெய்ப்பித்து உள்ளது. அதற்கான இப்போதைய உதாரணமாக, கோவை பெரியார் அறிவுலகத்தில் நடந்துள்ள புத்தகக் கொள்முதல் ஊழலே சாட்சியாகி உள்ளது.
.
தி.மு.க. கொஞ்சம் வித்தியாசமாக ஊழல் செய்து, கோவை பெரியார் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக மாற்றியிருக்கிறது. ஊழல் இலக்கியம் படைப்பதில் தி.மு.க. உயர் ரகம்தான் என்பதும் தெரிய வந்துள்ளது. பெரியார் அறிவுலகத்தைப் பார்த்துப் பார்த்துக் கட்டியதாகத் தம்பட்டம் அடித்துக்கொண்ட தி.மு.க. தலைமை, இப்படி நூல்கள் கொள்முதல் செய்வதிலும் பார்த்துப் பார்த்து, தரமற்ற நூல்களாகப் பரிந்துரை செய்து ஊழல் செய்துள்ளதை உலகமே பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கிறது." எனக் காட்டமாக விமர்சித்திருந்தார்.
.
இதற்கு பதிலளிக்கும் வகையில் திமுக-வின் அதிகாரப்பூர்வப் பக்கத்தில், “இடைத்தேர்தல் பிரச்சாரம் மற்றும் தேர்தல் முடிவுக்கு (அக்டோபர் 9) பிறகு தவெக தலைவர், டம்மி முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் இருந்து வந்திருக்கும் பதிவு ‘அடடே இந்த பொம்மை பேசுமா?’ என ஆச்சரியமளிக்கிறது. விலைவாசி உயர்வு குறித்து பதிவு இல்லை..கொலைகள் குறித்து கவலையில்லை…காணாமல் போன சிறுமி குறித்து விசாரிப்புகள் இல்லை…மின்வெட்டு, மின் கட்டணம் குறித்தெல்லாம் எந்த வாக்குறுதியும் இல்லை..அவ்வளவு ஏன் அரசின் அசமஞ்சத்தால் கடலில் இறந்து மிதந்த மீனவர்கள் குறித்து கூட பதிவு இல்லை.
.
ஆனால் திமுக தலைவர் கோவை பெரியார் அறிவுலகம் சென்றதும் அவருக்கு கிடைத்த பாராட்டும் பேசு பொருளானதும், புத்தக கொள்முதலில் ஊழல் என்று ஓடி வந்திருக்கிறார் தவெக தலைவர். பெரியார் அறிவுலகத்தில் அகல் விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகத்தின் போலியான நூல்களில் மட்டும் ஜூன் மாதம் என்று முத்திரை இடப்பட்டுள்ளது என்று அங்கிருக்கும் தோழர்கள் தெரிவிக்கிறார்கள். அந்த தேதி கூட dummy CMன் பிறந்தநாள் தான். அதே பெரியார் அறிவுலகத்தில் உள்ள வால்காவிலிருந்து கங்கை வரை போன்ற புகழ்பெற்ற மற்ற பதிப்பக நூல்கள் திமுக ஆட்சியின் மார்ச் மாத முத்திரையோடு உள்ளன. அப்படியென்றால் போலி பதிப்பக புத்தகங்கள் எப்பொழுது வாங்கப்பட்டன? யார் முடிவு எடுத்தது?
.
தவெக ஆட்சியில் யாருக்கு கமிஷன் போனது? கடந்த ஆட்சியில் நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்குவதில் எந்தவிதமான ஒளிவு மறைவுமின்றி வெளிப்படையான முறையில் புத்தகங்களை கொள்முதல் செய்யப்பட்டது என்பதை பதிப்பாளர்களே அறிவர். திமுக ஆட்சியில் புத்தகத் தேர்வுக்குழுவில் இருந்த எழுத்தாளர் ஒருவர் தவெக ஆட்சியமைந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு நூலகத்தில் உள்ள புத்தகங்களின் பெயர்களையும், திரிஷா விஜய், விஜய் பாலு, விஜய் செல்வம், விஜய் ஆதித்தன், சுமேகா விஜய் என்ற ‘எழுத்தாளர்களின்’ பெயர்களையும் பார்த்து பதறிய பிறகுதான் அரசுக்குத் தெரிந்ததா? அல்லது எந்த விவரமும் தெரியாமல் தான் dummy cm அறிக்கை விட்டு இருக்கிறாரா?" எனக் குறிப்பிட்டிருக்கிறது.
.பெரியார் நூலக விவகாரம்: ”ஊழல் இலக்கியம் படைப்பதில் திமுக உயர் ரகம்தான்” – முதல்வர் விஜய் காட்டம்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
<a href="https://tinyurl.com/2b963ppb">இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…</a><a href="https://tinyurl.com/2b963ppb"> https://tinyurl.com/2b963ppb</a>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… <a href="https://tinyurl.com/2b963ppb">https://tinyurl.com/2b963ppb</a>








