உள்ளடக்கத்திற்குச் செல்
இந்தியா

தவெக-வில் இணைந்த மகள் பொன்னரசி; அதிமுக முன்னாள் அமைச்சர், இந்நாள் மா.செ சண்முகநாதன் ஷாக் – பின்னணி?

தினப்புயல் • • 1 நாள் முன்பு • சுமார் 1 நிமிடம்
தவெக-வில் இணைந்த மகள் பொன்னரசி; அதிமுக முன்னாள் அமைச்சர், இந்நாள் மா.செ சண்முகநாதன் ஷாக் – பின்னணி?
வாசிப்பு
Facebook Telegram

தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.கவின் முகமாக பார்க்கப்பட்டு வருபவர் சண்முகநாதன். ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில்  அ.தி.மு.க வேட்பாளராகப் போட்டியிட்டு கடந்த 2001, 2011, 2016 ஆகிய மூன்று தேர்தல்களில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தவர். அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் இந்து சமய அறநிலையத்துறை, சுற்றுலாத்துறை, பால்வளத்துறை உள்ளிட்ட ஆகிய துறைகளின் அமைச்சராகவும்  இருந்தவர். தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளராக பொறுப்பு வகித்து வந்துள்ளார்.  

.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளராக பதவி வகித்து வந்த  முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, கடந்த சில மாதங்களுக்கு முன்பு த.வெ.கவில் இணைந்தார். இதனையடுத்து ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்டச் செயலாளராக சண்முகநாதன் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், சண்முகநாதனின் மகள்  மருத்துவரான பொன்னரசி மற்றும் அவரது கணவர் அசோக் ஆகியோர் த.வெ.க., மத்திய மாவட்டச் செயலாளரும், மீன்வளத்துறை அமைச்சருமான ஸ்ரீநாத் முன்னிலையில் இருவரும் அக்கட்சியில் இணைந்துள்ளார்கள்.

.

இதன் பின்னணி குறித்து உள் விவரமறிந்த அ.தி.மு.கவினரிடம் பேசினோம், “சண்முகநாதனின் மகன் ராஜா தூத்துக்குடி மாநகராட்சியின் 59வது வார்டு கவுன்சிலராக உள்ளார். இதுவரை ஒரு சில கூட்டங்களில் மட்டுமே கலந்து கொண்டுள்ளார். அவரது வார்டில் அடிப்படை வசதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என வார்டு மக்கள் கொதிப்பில் உள்ளனர். ராஜா, வேற்று சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டதால் சண்முகநாதனுக்கும் அவரது மகன் ராஜாவுக்கும் கருத்து வேறுபாடு நிலவி வந்தது.

.

இதனையடுத்து அவர் சென்னைக்கு சென்று விட்டார். கடந்த 2025-ம் ஆண்டு ராஜா மற்றும் அவரது மனைவி அனுஷா ஆகியோர் மீது ரூ.17 கோடி மதிப்பிலான பணம் மற்றும் சொத்து மோசடி தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார் பொன்னரசி.  குறிப்பிட்ட நிறுவனத்தில் முதலீடு செய்தால் 16 சதவீதப் பங்குகள் வழங்குவதாகக் கூறி பணம் மற்றும் சொத்துகளைப் பெற்றதாக  பொன்னரசி தனது புகாரில் தெரிவித்திருந்தார்.

.

இதன் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, ராஜா, மலேசியா செல்ல முயன்றபோது சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். ராஜா மற்றும் பொன்னரசி ஆகியோருக்கு இடையிலான சொத்துப் பிரச்னை, பண மோசடிப் புகார்களில் சண்முகநாதன் தலையிடவில்லை என்பதால் கடந்த ஓராண்டாகவே தந்தை சண்முகநாதனிடம் சரிவரப் பேச்சுவார்த்தை இல்லாமல் அதிருப்தியில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

.

இந்த நிலையில், பொன்னரசி இணைந்துள்ளது சண்முகநாதனுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. த.வெ.கவில் இணைந்துள்ளதால் தன் சகோதரர் ராஜா ஏமாற்றிய பணம் மற்றும் சொத்துக்களை மீட்டு விடலாம் என கணக்கு போட்டுதான் அக்கட்சியில் இணைந்துள்ளதாகவும் பேசப்படுகிறது” என்றனர். இதுகுறித்து விளக்கம் அறிய சண்முகநாதனை தொடர்பு கொண்டோம். அவர் நம் அழைப்பினை ஏற்கவில்லை.! 

READ NEXT

மேலும் செய்திகள்

இந்தப் பிரிவு →