அரசு பதவியை உதறிய விவேக் ராமசாமி; ஓஹியோ கவர்னர் பதவிக்கு போட்டி!

வாஷிங்டன்: கடந்த மாதம் டொனால்டு டிரம்பின் அரசாங்கத் திறன் துறை பதவியிலிருந்து விலகிய இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி, 2026ல் ஓஹியோ மாநில கவர்னர் தேர்தலுக்கான தனது பிரசாரத்தை துவங்கினார்.

முன்னாள் குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான விவேக் ராமசாமி ஓஹியோ கவர்னர் பதவிக்கான போட்டியில் நுழைந்துள்ளார். ராமசாமியின் தேர்தல் பிரசாரத்தை ஜே.டி.வான்ஸ் வழிநடத்துகிறார்.

சின்சனாட்டியில் நடந்த பேரணியில், விவேக் ராமசாமி பேசியதாவது: மனிதகுலம் அறிந்த மிகப்பெரிய தேசத்தின் மையத்தில் உள்ள ஒரு சிறந்த மாநிலத்தின் அடுத்த கவர்னராக போட்டியிடுகிறேன்.

நான் பிறந்து வளர்ந்த மாநிலம். இங்கு தான் எங்கள் இரண்டு மகள்களும் வசிக்கின்றனர். ஒரு தொழிலை துவங்கி வளர்க்க நாட்டிலேயே சிறந்த மாநிலமாக ஓஹியோவை நான் வழிநடத்துவேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

யார் இந்த விவேக் ராமசாமி?

* விவேக் ராமசாமி, 39, கேரளாவை பூர்விகமாக கொண்ட தமிழர். இவரது பெற்றோர், கேரளா, பாலக்காடு மாவட்டத்தில் இருந்து அமெரிக்காவின் சின்சினாட்டியில் குடியேறினர்.

* இவர் ஹார்வர்ட் மற்றும் யேல் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்.

* குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்ட விவேக் ராமசாமி, பிறகு அதில் இருந்து பின்வாங்கினார்.

* விவேக் ராமசாமி தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர் அபூர்வா திவாரியை மணந்தார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.