உள்ளடக்கத்திற்குச் செல்
இந்தியா

முன்னேற்றம்… பின்னடைவு… இறுதியில் மாரடைப்பு – வி.எஸ்.பாபுவின் கடைசி 72 நாட்கள்

தினப்புயல் • • 5 மணி நேரங்கள் முன்பு • சுமார் 1 நிமிடம்
முன்னேற்றம்… பின்னடைவு… இறுதியில் மாரடைப்பு – வி.எஸ்.பாபுவின் கடைசி 72 நாட்கள்
வாசிப்பு
Facebook Telegram

72 நாட்களாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு காலமானார். மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரின் உடல்நிலை முன்னேற்றம்…பின்னடைவு என மாறி மாறி போக்குக் காட்டி இறுதியில் உயிர் பிரிந்திருக்கிறது.

வி.எஸ்.பாபுவுக்கு என்ன ஆனது?

ஆகஸ்ட் 5 ஆம் தேதி சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது. செப்டம்பர் 8 ஆம் தேதி வரை நடந்த சட்டமன்றக் கூட்டத் தொடர் முழுவதிலுமே வி.எஸ்.பாபு கலந்து கொண்டார். சட்டமன்றத்துக்கு வருகையிலும் அவையை முடித்துவிட்டு கிளம்புகையிலும் அவரின் ட்ரேட்மார்க் கை சைகையை செய்தும் மீசையை முறுக்கி போஸ் கொடுத்துவிட்டும் செல்வார். இந்நிலையில், கூட்டத்தொடர் முடிந்த மறுநாளான செப்டம்பர் 9 ஆம் தேதியே வி.எஸ்.பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

.

சளித்தொல்லை மற்றும் மூச்சுத்திணறலால் வி.எஸ்.பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஒரு சில நாட்கள் கழித்து அவருக்கு சுவாசக்கருவியின் உதவியுடன் சிகிச்சை வழங்கப்படுவதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு வந்த முதல்வர் விஜய் செப்டம்பர் 23 ஆம் தேதி வி.எஸ்.பாபுவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த வி.எஸ்.பாபுவை முதல்வர் நேரில் பார்த்து ஆறுதல் கூறி, 'சீக்கிரம் மீண்டு வாங்க' என உத்வேகம் கொடுத்திருந்தார். செப்டம்பர் 22 ஆம் தேதி மருத்துவமனை தரப்பில் கடைசியாக அறிக்கை வெளியாகியிருந்தது. அதில் வி.எஸ்.பாபுவின் உடல்நிலை சிகிச்சைக்கு ஒத்துழைப்பதாகவும் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகவும் கூறப்பட்டது.

.

இதன்பிறகு அவரின் உடல்நிலை குறித்து எந்த அறிக்கையும் வெளியாகவில்லை. 'அப்பாவின் உடல்நிலை குறித்து பொதுவெளியில் தெரிவிக்க வேண்டாம்' என வி.எஸ்.பாபுவின் மகன்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடுவதை நிறுத்திக் கொண்டதாக தகவல்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தாலும் சில சமயங்களில் அவரின் உடல்நிலை நல்ல முன்னேற்றத்தை காட்டியிருக்கிறது. 'அவருக்கு ஒண்ணும் இல்ல உற்சாகமா இருக்கார். பொழுது போறதுக்காக படம் பார்க்குற அளவுக்கு தேறிட்டாரு' என அவரது குடும்பத்தினர் கட்சியினருக்கு தகவல் சொல்லியிருக்கின்றனர். அமைச்சர்கள் அருண்ராஜும் மரிய வில்சனும் இடையிடையே அவரைப் போய் சந்தித்து வந்தனர். சபாநாயகர் ஜே.சி.டி.பிராபகரும் இடையில் இரண்டு முறை அவரிடம் போனில் பேசி நலம் விசாரித்திருக்கிறார். போனில் பேசுமளவுக்கு முன்னேற்றம் அடைந்ததால் அவர் எப்படியும் மீண்டு வந்துவிடுவார் என்றே தவெகவினர் நினைத்தனர்.

.

ஆனால், மீண்டும் அவரின் உடல்நிலை பின்னடைவை எட்டவே வெண்டிலேட்டர் உதவியுடன் உயிரை காக்க மருத்துவர்கள் போராடியிருக்கின்றனர். உயர் ரக அதி தீவிர சிகிச்சைகளும் அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. முதல்வரும் அவ்வபோது பாபுவின் உடல்நிலை குறித்து கேட்டு தெரிந்துகொண்டே இருந்திருக்கிறார். வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கும் போதே மாரடைப்பும் ஏற்பட்டதால் அவரின் உயிர் பிரிந்திருக்கிறது.

தீவிர சிகிச்சையில் இருந்திருந்தாலும் நம்பிக்கையளிக்கும் முன்னேற்றத்தை காட்டிவிட்டு அவரது உயிர் பிரிந்திருப்பதில் முதல்வர் உட்பட வி.எஸ்.பாபுவுக்கு நெருக்கமான அமைச்சர்கள் பலரும் சோகத்தில் ஆழ்ந்திருக்கின்றனர்.

READ NEXT

மேலும் செய்திகள்

இந்தப் பிரிவு →